இன்ஸ்டாவில் உளறி கொட்டியதால்...தொழிலதிபரை கைது செய்த வனத்துறை..!

பிரபல இன்ஸ்டா பக்கம் கோயமுத்தூர் மாப்பிள்ளை. கோவையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே சின்னதாகப் பேட்டி எடுத்து அதைக் கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற பக்கத்தில் வெளியிட்டு வருவார்கள். அதன்படி தான் சமீபத்தில் கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேட்டி எடுத்திருந்தனர். அந்த வீடியோ தான் சர்ச்சையானது.
பேட்டியின் போது, அந்த நபர் அணிந்திருந்த செயின் குறித்து இன்ஸ்டா பிரபலம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நபர், "இதை எல்லாம் நான் வெளியே சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இது புலி நகம். நான் ஆந்திராவுக்குச் சென்ற போது. இதைக் காசு கொடுத்து வாங்கினேன்" என்று கூறியிருந்தார். மேலும், தனக்கு வேட்டைக்குப் போக வேண்டும் என்றும் கூட ஆசை இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் இறுதியில் அந்த இன்ஸ்டா பிரபலம், "இந்த பேட்டி மட்டும் வரட்டும்.. நீங்க டிரெண்டாவீங்க பாருங்க" என்று சொல்லிவிட்டுச் சென்றார். இன்ஸ்டா பிரபலம் சொன்னது போலவே அந்த வீடியோ வெளியான உடனேயே இன்ஸ்டாகிராமில் டிரெண்டானது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்தனர். மேலும், புலி நகத்தை அணிவது சட்டப்படி தவறு என்பதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து பாலகிருஷ்ணனின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புள்ளிமானின் கொம்பின் துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்தனர்.மேலும், பாலகிருஷ்ணனை நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் பாலகிருஷ்ணன் வனத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் அணிந்திருந்த புலி நகம் போட்ட செயினை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், அதைச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலகிருஷ்ணனை கைது செய்த வனத்துறையினர் அவரை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.