நேற்று 90% பேருந்துகளை இயக்கிய நிலையில், இன்று 50% பேருந்துகள் மட்டுமே இயக்கம்... மக்கள் அவதி..!
தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டாத நிலையில், நேற்று முதல் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது. தொ.மு.ச தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை வைத்து நேற்று 90% பேருந்துகளை இயக்கிய நிலையில், இன்று 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
பல இடங்களில் தற்காலிக ஊழியர்களை வைத்து இயக்கப்பட்ட பேருந்துகள், விபத்துகளில் சிக்கிய நிலையில், ஒரு சில இடங்களில் போக்குவரத்து அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இன்று நீடிக்கும் நிலையில், பல இடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பெரும்பாலான போக்குவரத்து பணிமனைகளில், 4 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய இடத்தில் 2 பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பாதிக்குப்பாதி பேருந்துகள் இயக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்தில் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும், மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளும் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வெளியூர் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பல்லவன் இல்லம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ள நிலையில் அந்த சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.