அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது..!

டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் விசாரணையின்போது உத்தரவை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்திருந்தது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன், இடைக்கால ஜாமீன் மனுவையும் சுப்ரீம் கோர்ட் விசாரித்தது.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டபோது, ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இடைக்கால ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை (மே 10) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.