1. Home
  2. தமிழ்நாடு

’’அருணாச்சலம்’’ பெயர் மாற்றம் சர்ச்சை.. நடத்துனர் சஸ்பெண்ட் !

1

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, கிரிவலம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவது வழக்கம். அப்படி வருகை தரும் பக்தர்கள் கிரிவலம் செய்வர். அந்த வகையில் கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கின்றனர்.

இதனால் சமீப நாட்களாகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பக்தர்களின் வருகைக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட செயல்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சார்பில் டூர் பேக்கேஜ் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இதன் மூலம் மக்கள் சிரமமின்றி திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றன.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டூர் பேக்கேஜ் பேருந்து ஒன்றில் திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாச்சலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பான பேருந்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளானது.இதனை அடுத்து அரசு போக்குவரத்து கழகம் அருணாச்சலம் என்ற பெயரை மாற்றி திருவண்ணாமலை என்று மாற்றம் செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


 

அதில், அரசு பேருந்துகளில் இருந்து அருணாச்சலம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது இனி வழக்கம் போல் முதலில் இருந்த திருவண்ணாமலை என்று பெயர் பலகையில் அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு பனிமலையில் இருந்து கடந்த ஜூலை 15ஆம் தேதி பெங்களூருக்கு சென்ற அரசு அதிவிரைவு பேருந்தில் திருவண்ணாமலை என்ற பெயர் பலகைக்கு பதிலாக அருணாச்சலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டது.


 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அப்பெருந்து நடத்துனர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயராகவன் என்பது தெரிய வந்தது இதனை அடுத்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஜெய்சங்கர் விஜயராகவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். முன்னதாக திருவண்ணாமலைக்கு ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அண்ணாமலையார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் தமிழ் பெயர் பலகை பதிலாக தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like