மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் பெயர்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சித்தலைவர்களான உங்களின் பங்கு முக்கியமானது.இந்த திட்டம் அண்ணாவின் பிறந்ததினமான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதகாலமே உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.