விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து..!
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு கடந்த 31ஆம் தேதி பிடிவாரன்ட் பிறப்பித்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டு இவ்வழக்கினை ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒத்திவைத்தார்.
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் பிடியானை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் எம்.பி திருமாவளவன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று வழக்கறிஞர்கள் இன்று தாக்கல் செய்த பிடிவாரண்டு உத்தரவை திரும்ப பெறும் மனுவை ஏற்ற நீதிபதி விஜயகுமாரி வருகின்ற ஆகஸ்டு 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றார்.