கந்தனுக்கு அரோகரா...! இன்று திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; களமிறங்கிய 5,500 போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ள நிலையில் 5,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த திருவிழாவை முன்னிட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இயங்கும் மேற்படி காவல்துறை ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு ஏதேனும் அசாம்பாவிதம் நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று குற்றச் சம்பவங்களை தடுக்கவும், சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களை நேரடியாக கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலமும் அனைத்து இடங்களையும் கண்காணித்தும் பக்தர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த ரோந்து வாகன துவக்க விழாவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகரக் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உள்பட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் IMA மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி நகரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 9 காவல் கண்காணிப்பாளர்கள், 32 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 73 காவல் உதவி கண்காணிப்பாளர்/காவல் துணை கண்காணிப்பாளர்கள், 87 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட என சுமார் 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.