கந்தனுக்கு அரோகரா..! இன்று முதல் பிப்ரவரி 12 வரை பழனியில் தரிசன கட்டணம் ரத்து..!
பழனி முருகன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 10) திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ள நிலையில், நாளை (11ஆம் தேதி) தைப்பூசமும், தேரோட்டமும் நடைபெற உள்ளது. முருகனை தரிசித்து அருள் பெற நாள்தோறும் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனியில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவும் சாமி தரிசனம் செய்து முடித்து மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடிவாரம் மற்றும் கிரிவலவீதி பகுதிகளில் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து வந்து ஆடிப்பாடி மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பழனி மலைக்கோயிலில் இன்று (பிப்ரவரி 10) முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் 3 நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசன வழியில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.png)