இந்த பகுதிகளை பார்க்க சுற்றுலா பயணியருக்கு ராணுவம் அனுமதி..!
ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று கூறியதாவது: சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு பின் அமைந்த புதிய அரசால், ஜம்மு - காஷ்மீர் சுற்றுலா துறை மகத்தான வளர்ச்சியை எட்டியுள்ளது. பயங்கரவாதம் நிறைந்திருந்த அங்கு தற்போது அமைதி நிலவுவதால், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 48 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சாகச நடவடிக்கைகளை ஊக்குவிக்க இந்திய ராணுவம் உறுதி ஏற்றுள்ளது.
மலையேறுதல் போன்ற சாகசங்களில் பயிற்சியாளர்கள் உதவியுடன் பொதுமக்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிரான்ஸ் - ஹிமாலயன் மலையேற்றம், உத்தரகண்டில் உள்ள 'சோல் ஆப் ஸ்டீல்' மலையேற்றம் மற்றும் சியாச்சின் பனிப்பாறை பகுதியிலும் மலையேறும் சாகசங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
போர்க்கால அனுபவங்களை சுற்றுலா பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், கார்கில், கல்வான் பள்ளத்தாக்கு, சியாச்சின் பனிப்பாறை போன்ற பகுதிகளை அவர்களுக்காக திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.