1. Home
  2. தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் கோர்ட் காவல் 22-ம் தேதி வரை நீட்டிப்பு..!

1

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் சரணடைந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.

இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே குற்றப்பத்திரிகையில் ஏ2 ஆக சேர்க்கப்பட்டுள்ள சம்போ செந்திலை கைது செய்ய தனிப்படை போலீசார் துபாய் செல்லவுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Trending News

Latest News

You May Like