1. Home
  2. தமிழ்நாடு

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள்! பொது மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள்! பொது மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை யொட்டி, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான 9 -வது நாளில் ஆயுத பூஜை திருநாளையும், அதற்கடுத்த 10-வது நாளில் விஜயதசமி திருநாளையும் பொது மக்கள் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகள்.

மனித வாழ்க்கையில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு ஆயுத பூஜை திருநாளை கொண்டாடுவது வழக்கம்.

விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறும் என்பதால், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுகின்றனர்.

இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like