1. Home
  2. தமிழ்நாடு

ஜாகிர் உசேன் மகன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

1

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் மர்ம நபர்களால் கடந்த 18 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் சரணடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்பிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 17 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி மனைவி நூர்நிஷாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் மகன் இச்சூர் ரகுமான் பிஜிலி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த டார்கெட் நான் தான் என்றும், தங்களது வீட்டை சிலர் தொடர்ந்து நோட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தியின் மனைவியான நூர்நிஷா தற்போது வரை கைது செய்யப்படவில்லை. காவல் துறை தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது அரசுக்கு கெட்ட பெயரை தான் ஏற்படுத்தும். உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்தனர்.

உதவி ஆணையாளர் செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் இதுபோன்று தவறாக ஒரு வன்கொடுமை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதிலும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையே தொடர்ந்து அவர் செய்து வருகிறார். காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையாளர் மீது விசாரணை நடத்தி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.'' என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக இச்சூர் ரகுமான் பிஜிலி வீடியோ வெளியிட்ட நிலையில், இன்று (மார்ச் 22) திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் சார்பு ஆய்வாளர் தலைமையில் 2 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய போலீசார் அவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காவல் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் தொலைபேசியில் கேட்டபோது, ''குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அந்த பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில நாட்கள் அந்த பாதுகாப்பு வழங்கப்படும்'' என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like