1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிக்குச் செல்ல அவ்வளவு ஆர்வமா..? வாசலில் காத்திருந்த 6 வயது சிறுவன்..!

பள்ளிக்குச் செல்ல அவ்வளவு ஆர்வமா..? வாசலில் காத்திருந்த 6 வயது சிறுவன்..!


எல்லா மாணவர்களும் பள்ளியின் விடுமுறையை விரும்புபவராக இருந்தாலும், தற்போதைய தொடர் விடுமுறை காரணமாக பள்ளிக்கு சென்று தங்களுடைய நண்பர்களுடன் பழக முடியாமலும், ஓடியாடி விளையாட முடியாத சூழலும் உள்ளது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த மதியழகன் - லட்சுமி தம்பதியின் இளைய மகன் நித்தின் ராஜ் (6). இவர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டிற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், “நான், பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்; என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுங்கள்” என்று தன்னுடைய பெற்றோரிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார் நித்தின் ராஜ். பெற்றோரும், “பள்ளிக்கூடம் இன்னும் திறக்கவில்லை; திறந்தவுடன் செல்லலாம்” என தங்கள் மகனை சமாதானம் செய்து வந்துள்ளனர்.

நேற்று முன் தினம், தன்னுடைய சகோதரனின் சீருடைகளை அணிந்துகொண்ட நித்தின் ராஜ், புத்தகப்பையை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று வாசலில் நின்றுகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நித்தின் ராஜிடம் விசாரித்தபோது, “பள்ளிக்கு வந்துள்ளேன்; கதவை திறக்கச் சொல்லுங்கள், நான் உள்ளே செல்ல வேண்டும்” என, கெஞ்சும் குரலில் கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள், நித்தின் ராஜ் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த பெற்றோர், நித்தின் ராஜை சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Trending News

Latest News

You May Like