வெப்ப நிலையால் 5 பேர் உயிரிழந்துவிட்டதாக சொல்கிறீர்களே..? பொதுமக்களை குறை கூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா..? வானதி கேள்வி!
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாகசத்தைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் மரணத்துக்கு எம்பி கனிமொழி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலினைதான் கேள்வி கேட்க வேண்டும் என்றும், பொதுமக்களை குறை கூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா என்றும் கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில், அடிப்படை வசதிகளின்றி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்து பெரும் துயருற்றேன். இழப்பின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாகச நிகழ்ச்சியைக் காண வரும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துதர தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, பொது மக்களைக் குறைகூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா கனிமொழி.
“நடக்கவிருக்கும் விமான சாகச நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான துணைத் தளபதி பிரேம்குமார் முன்கூட்டியே தெரிவித்திருந்த போதும், கூடும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யாதது யார் தவறு?.
லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், போதுமான ஆம்புலன்ஸ் வசதிகள், முதலுதவி வசதிகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையல்லவா?.
“சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதை தவிர்க்கவும்” என பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கும் நீங்கள், 15 லட்சம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை முன்னமே கணக்கிட்டு, கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பல உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக முதல்வரின் நிர்வாகத் தோல்வியை ஒப்புக் கொள்கிறீர்களா?.
வெப்ப நிலையால் 5 பேர் உயிரிழந்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்கிறீர்களே, வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க பொதுமக்களுக்கு எந்த வசதியும் செய்துதராத தமிழக முதல்வர், குடும்பம் சகிதமாக கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு குளு, குளு பந்தலில் அமர்ந்து சாகச நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தாரே, இதுதான் உங்கள் கட்சியின் சமூகநீதியா? ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.