1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா ? இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

1

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார்கள்.கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட செல்வதால் தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை கோயம்பேட்டில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மேலும் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

இன்று (9-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் 13-ம் தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க பஸ், ரயில்கள், கார்களில் ஏராளமானோர் இன்று முதல் பயணத்தை தொடர்கின்றனர். சிறப்பு பஸ்களிலும் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பயணம் ஆகிறார்கள்.

சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இன்று இயக்கப்படுகின்றன.

முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள். இதுவரையில் 1500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களுக்கான முன்பதிவு நடந்து உள்ளது.

முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம். இந்த ஆண்டு வெளியூர் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அரசு பஸ்களை தவிர, ஆம்னி பஸ்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள். 10-ம் தேதி பயணம் செய்யவே மக்கள் ஆர்வமாக உள்ளனர். அன்றைய தினம் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like