நீங்க 70 வயதை கடந்தவரா..? அப்போ இலவசமாக 5 லட்சம் காப்பீடு பெறலாம்..!
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன?
ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஒன்றிய அரசு 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களில் உள்ள நோயாளிகள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள், பரிசோதனைகள் போன்றவை கூட இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கு விரிவாக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்
அக்டோபர் 29 அன்று, பிரதமர் மோடி 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்பாட்டை விரிவாக்கினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனாளிகளுக்கு பொருளாதார அளவுகோல்கள் உள்ளன. ஆனால், தற்போது விரிவாக்கப்பட்டுள்ள மூத்தக் குடிமக்களுக்கான திட்டத்தில், ஒன்றிய அரசு எந்த பொருளாதார அளவுகோல்களையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, 70 வயதைக் கடந்தவர்கள் எந்தத் தடையும் இன்றி இந்த திட்டத்தின் பயனைப் பெறமுடியும்.
விண்ணப்பிக்கும் முறை
மூத்த குடிமக்கள் காப்பீடு பெறுவதற்கான விண்ணப்பத்தை https://beneficiary.nha.gov.in என்ற இணையதளம் மூலம் அல்லது ‘ஆயுஷ்மான் பாரத்’ செயலியின் வழியாக செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்திற்கான வழிமுறைகளை தேசிய சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஆயுஷ்மான் பாரத்’ செயலியை பதிவிறக்கம் செய்து, தகுதி பரிசோதனை செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
- பயனர் பதிவு: முதலில் ஆதார் எண், குடும்ப அட்டை எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- புகைப்படம் மற்றும் தகவல் பதிவு – சுயவிவரங்களை பதிவிட்ட பிறகு புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். தொடர்பு முகவரி மற்றும் செல்பேசி எண் உள்ளிட்ட தகவல்களையும் சரிபார்க்க வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள் விவரம்: 70 வயதிற்கு மேற்பட்ட வேறு குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்களின் விவரங்களையும் சேர்க்க வேண்டும்.
- காப்பீடு அட்டை பதிவிறக்கம் – அனைத்து தகவல்களும் சரிபாரிக்கப்பட்டதும், காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
Free Health Insurance for Senior Citizens! 🏥
— PIB in Tamil Nadu (@pibchennai) October 30, 2024
Seniors aged 70+ can now avail free treatment up to ₹5 lakh/year under #PMJAY
Get your Ayushman Vay Vandana Card today! 👇https://t.co/ZNSQsC4tz5#AyushmanBharat #FreeHealthcare #AyushmanCard @MoHFW_INDIA @MIB_India @PIB_India