வால்பாறை பொள்ளாச்சி பக்கம் போறீங்களா..? கொஞ்சம் பார்த்து போங்க...!

வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்கள், வால்பாறை டவுன் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் என பல வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டி உள்ளது.
மேலும் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கொண்டை ஊசி வளைவு, ஆழியாறு கவியருவி செல்லும் சாலையில் அவ்வப்போது யானை நடமாட்டம் காணப்படும். இரவு நேரங்களில் யானைகள் இந்த சாலையை கடந்து செல்லும். இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவும், வால்பாறை மலைப் பாதையில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் மெதுவாக செல்லவும் அறியுறுத்தப்படுவார்கள்.
இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அப்போது வனத்து சின்னப்பர் கோவில் அருகில் சாலையின் ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் சிறுத்தை ஒன்று படுத்து இருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
வாகனத்தைக் கண்ட சிறுத்தை கட்டடத்திற்கு பின் இறங்கி சென்றதும், மீண்டும் சாலையில் மெதுவாக நடந்து சென்று குடியிருப்பு பகுதிக்குள் செல்வதும் பதிவாகி உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக வால்பாறை வனத்துறையினர் கூறுகையில்: வால்பாறையில் வாழைத்தோட்டம் குடியிருக்கு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தனியே செல்ல வேண்டாம். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் புது தோட்டம், ரொட்டிக்கடை, வாட்டர் பால்ஸ், அட்டகட்டி போன்ற பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர் கனரக வாகனங்களுக்கு பின்பாக வரவேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம். விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என அறியுறுத்தி உள்ளனர்.