நாளைக்கு ஊருக்கு போறீங்களா ? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகிய பல்வேறு காரணங்களால் சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களின் போது மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.
இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.கிளாம்பாக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி 470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் 365 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி 70 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17ஆம் தேதிகளில் 65 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.இதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் ஞாயிற்றுக் கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.