சபரிமலை போறீங்களா ? மார்ச் 14 முதல் புதிய நடைமுறை அமல்..!

மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மேலும், சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுவாக மாத பூஜை நடைபெறும் நாட்களில் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், மாசி மாத பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இதற்கிடையே,கடந்த 17ம் தேதி இரவுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை முறைப்படுத்த ஒரு புதிய மாற்றம் நடைமுறைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி வரும் மார்ச் மாதம் முதல் மாற்றம் வரவுள்ளது. அதாவது மார்ச் 14ம் தேதி முதல் பக்தர்கள் 18ஆம் படி ஏறிய உடன் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் 18ஆம் படி ஏறிய பின்னர் இடது புறமாக சென்று நடை மேம்பாலத்தில் ஏற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, 18ம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் இடதுபுறமாகவும் வலதுபுறமாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்.