1. Home
  2. தமிழ்நாடு

கொடைக்கானல் போறீங்களா ? புதிய விதிமுறை அமல் - சுற்றுலா பயணிகள் உஷார்..!

1

சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப்படியும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் உத்தரவின்படி மற்றும் வழிகாட்டுதல்களின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை 07.05.2024 தேதியிலிருந்து செயல்பாட்டில் உள்ளது. இ-பாஸ் நடைமுறை மற்றும் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்திருந்தார்.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு எளிதில் இ-பாஸ் எடுக்கும் வகையில் க்யூஆர்கோட்(QR Code) வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் ஸ்கேனிங் கொடைக்கானல் நகராட்சி சில்வர்பால்ஸ் அருகில் உள்ள டோல்கேட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பகுதியில் இ-பாஸ் பரிசோதனையின்போது போக்குவரத்து நெரிசல், இணையதள பிரச்சனைகளால் புதிதாக இ-பாஸ் வழங்குவது மற்றும் ஸ்கேன் செய்வதில் கூடுதல் கால அவகாசம் ஏற்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு சில்வர்பால்ஸ் டோல்கேட்டில் நடைமுறையில் இருந்து வந்த இ-பாஸ் ஸ்கேனிங் செய்யும் பணிகள் கொடைக்கானல் நுழைவாயிலாக உள்ள காமக்காபட்டி காவல் சோதனை சாவடி, தர்மத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வன சோதனை சாவடி, பாலசமுத்திரம் காவல் சோதனை சாவடிகளில் இ-பாஸ் ஸ்கேன் செய்து வாகனங்களை அனுப்பும் நடைமுறை 13.11.2024 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது.

இதன் மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று இ-பாஸ் ஸ்கேன் செய்வதற்கான அவசியம் இல்லை. போக்குவரத்து நெரிசல் இன்றியும் உள்ளது. ஏற்கனவே இ-பாஸ் எடுத்துள்ளவர்களுக்கு ஸ்கேனிங் செய்வதும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு உடனடியாக இ-பாஸ் பெற்று, ஸ்கேன் செய்து அனுப்புதல் மற்றும் அனைத்து வகையான தடைசெய்யப்பட்ட நெகிழி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்யும் பணிகள் இந்த 6 சோதனைச் சாவடிகளில் நடத்தப்படுகிறது.

அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்த நிலையில், 5 லிட்டருக்கும் குறைவான வாட்டர் பாட்டில்கள் கொண்டு கொடைக்கானலுக்குள் கொண்டு வர தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like