கிரிவலத்திற்கு போறீங்களா ? திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை செவ்வாய்க்கிழமை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (22-ம் தேதி) 527 பேருந்துகளும் நாளை 628 பேருந்துகளும் மேலும் சென்னை மாதவரத்திலிருந்து இன்று 30, நாளை 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும், நாளை 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 40 குளிர்சாதன பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூருவிலிருந்து முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.