கல்யாணம் பண்ண போறீங்களா ? அப்போ HIV டெஸ்ட் கட்டாயம் - மாநில அரசு முடிவு..!
மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் பாதித்தோர் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. நாட்டிலேயே எய்ட்ஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஆறாவது இடத்தை மேகாலயா பெற்றுள்ளது.
இந்நிலையில், எச்.ஐ.வி., பாதிப்பை தடுப்பது தொடர்பான விரிவான கொள்கையை உருவாக்குவது குறித்த கூட்டம், மாநில துணை முதல்வர் பிரிஸ்டோன் டியான்சங் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின் அமைச்சர் அம்பரின் லிங்டோ கூறியதாவது:
எச்.ஐ.வி., சோதனை நடத்துவது கோவாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் ஏன் நாம் இதற்கென தனி சட்டத்தை உருவாக்க கூடாது.
இந்த சட்டத்தின் வாயிலாக பெரும்பாலானோர் பயன் அடைவர். எனவே திருமணத்துக்கு முன் மணமக்களுக்கு பாலியல் நோய் உள்ளதா என்பதை கண்டறிவதற்கான எச்.ஐ.வி., சோதனை நடத்துவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான கொள்கையை உருவாக்க சுகாதாரத்துறைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. கிழக்கு காசி மலைப் பகுதியில் 3,432 எச்.ஐ.வி., நோயாளிகள் இருந்தாலும், 1,581 பேர் மட்டுமே இதற்கு சிகிச்சை பெறுகின்றனர். ஜெயின்டியா மலைப்பகுதியில் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகமாக உள்ளது.
எச்.ஐ.வி., பரவலை தடுக்க, பெற வேண்டிய ஏ.ஆர்.டி., எனப்படும், 'ஆன்டி ரெட்ரோ வைரஸ்' சிகிச்சையை பெறாததால், 159 பேர் இறந்துள்ளனர்.