கோடை விடுமுறைக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு..!

கோடை சீசனில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகக் கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மார்ச் மாதம் 28- ம் தேதி முதல் ஜூலை 7- ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கள்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 40, மற்றும் இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
குன்னூர் முதல் ஊட்டி வரை மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பிலும், 140 இருக்கைகள் இரண்டாம் வகுப்பிலும் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் ரயிலானது மதியம் 2.25 மணிக்கு ஊட்டியைச் சென்றடையும். காலை 11.25 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்படும் ரயிலானது மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊட்டி அழகும் அற்புதம் நிறைந்த மலைவாசஸ்தலமான இங்கு செல்லாமல் இருப்பவர்களே இருக்க முடியாது. செல்ல விரும்பாதவர்களும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இயற்கையின் அழகும் பசுமையும் இதமான குளிரும் மேகம் தவழும் மலைமுகடும் உள்ள ஒரு சொர்க்கம்போல அமைந்த இடம் ஆகும்.
ஊட்டி ஏரி
65 ஏக்கர் பரப்பளவில் அழகே வடிவாய் அமைந்திருக்கிறது ஊட்டி ஏரி. இங்கிருக்கும் படகு இல்லம் பிரபலமானது. இங்கே படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அருகில் இருக்கும் மினி ரயிலில் குழந்தைகள் சவாரி செய்து மகிழலாம். பொழுதுபோக்கு பூங்காவில் விளையாடி களிக்கலாம்.
சில்ட்ரன்ஸ் பார்க்
ஏரியின் கிழக்குப் பக்கம் எல்லையில் இருக்கிறது சில்ட்ரன்ஸ் பார்க். இங்கு உள்ள புல்வெளியும் இங்கு பூத்துக்குலுங்கும் மலர்களும் ஆனந்தத்தை அள்ளித்தரும். குழந்தைகள் விளையாடி மகிழ ஏற்ற இடம் ஆகும்.
தாவரவியல் பூங்கா
அரசு தாவரவியல் பூங்கா ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். புல்வெளியில் வண்ண வண்ண மலர்களும் மூலிகைகளும் க்யூட்டான போன்சாய் மரங்களும் உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும் இங்கே உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் புற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்திய வரைபட வடிவம் உலக வரைபடம் போன்றவை தன்னகத்தே ஈர்க்கும். இந்தப் பகுதிகளை விதவிதமாக போட்டோ எடுப்பதை பலரும் விரும்புகின்றனர்.
தொட்டபெட்டா
நீலகிரி மலைத்தொடரில் மிக உயரமான இடமாகிய தொட்டபெட்டா ஊட்டியில் பார்க்க வேண்டிய முக்கிய பகுதியாகும். 2623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த தொட்டபெட்டா இந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும் இங்கிருந்து வசீகரிக்கும் பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்க தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே மேகங்கள் உங்களை தொட்டு விளையாடும் அழகை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
எமரால்டு ஏரி
ஊட்டியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது எமரால்டி ஏரி. ஊட்டியில் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் இதுவும் ஒன்று. அமைதியாக அமர்ந்து இயற்கையின் அழகில் மயங்கி இன்பம் காண ஏற்ற இடம் ஆகும் இங்கிருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் பிரம்மிக்க வைப்பதாகவும் இருக்கம்.
அவலாஞ்சி
அவலாஞ்சி ஊட்டியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எமரால்டு ஃபாரஸ்ட் வழியாக மேல் பவானி செல்லும் வழியில் இருக்கிறது. இந்த இடத்திற்கு செல்லும் சாலை வளைவுகளில் இருந்து பார்த்தால் அற்புதமான அழகிய காட்சிகள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். அவலாஞ்சி குன்றின் மீது இருந்து பார்க்கும்போது அங்கு ஓடும் ஆறுகளும் பள்ளத்தாக்கின் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முதுமலை வனவிலங்கு காப்பகம்
கர்நாடக மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும் .இது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டுள்ளது. யானைகள் காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் பறக்கும் அணில் சிவப்பு அணில், காட்டுப்பன்றி முயல் போன்ற பல்வேறு வகையான விலங்குகளின் இருக்கின்றன.
ரோஸ் கார்டன்
ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று. இந்த தோட்டம் சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய ஐந்து மாடி பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இடம் ஆகும். இங்கே இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் இருக்கிறது. இங்கே மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் வண்ண வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பைக்காரா அருவி
நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக இங்கே உருவெடுக்கிறது சுமார் 55 மீட்டர் உயரத்திலிருந்து சலசலத்துக் கொட்டும் அருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஊசி பாறை காட்சி முனையம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள இடம் இது ஊட்டியில் இருந்து 51 கிலோமீட்டர் தூரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 360° பார்வையை அளிக்கக்கூடியது.
தவளை மலை காட்சி முனை
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த தவளை மலை காட்சி முனை அமைந்துள்ளது. இங்கு காலையில் சென்று மாலையில் இறங்குவது சுற்றுலா பயணிகளின் வாடிக்கையாகும்.
காட்டேரி அருவி
குன்னூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த காட்டேரி அருவி 180 அடி உயரம் கொண்டது. நடந்து செல்லும் அனுபவம் இந்த அருவியின் அழகை காணும் பூரிப்பை அதிகரிக்கும்.
கேத்தரின் அருவி
அருவி விழக்கூடிய மலை நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த இடமாக உள்ளது. இந்த அருவியின் உயரம் ஏறக்குறைய 250 அடி ஆகும். இந்த அருவியை முழுமையாக பார்க்க வேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும்.
ஊட்டி செல்ல ரெடியாகி விட்டீர்களா? இத்தனை இடங்களையும் பார்த்துவிட்டு அனுபவித்துவிட்டு வாருங்கள்.