மூத்த குடிமக்களா நீங்கள் ? வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உட்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது 21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய நாட்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in
ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.