1. Home
  2. தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்பவரா நீங்கள் ?உங்களுக்கான ‘ஜாக்பாட்’ பரிசு காத்துகிட்டு இருக்கு..!

1

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் தொலை தூர பேருந்துகளில் பயணிக்க முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட ஆப்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர்.

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழத்தின் சார்பில் இ-சேவை மையங்களிலும் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பொதுமக்களின் அமோக வரவேற்புடன் செயல்படும் முன்பதிவு திட்டத்தினை மேலும் அதிக பயணிகள் பயன்பெறும் வகையில் பிரபலப்படுத்த 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர 'குலுக்கல் முறை' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தாண்டு கோடை காலத்திற்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வோரில் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து கீழ்கண்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு - 25 நபர்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை).

இரண்டாம் பரிசு - 25 நபர்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை).

மூன்றாம் பரிசு - 25 நபர்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) மேற்கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம்! முன்பதிவு செய்ய: www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தவும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like