நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா..? போலீசார் விசாரணை

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் போதைப்பொருளை கடத்தி வந்து மொத்தமாக விற்பனை செய்பவர்களையும், அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபடுவோரையும் போலீசார் தினமும் கைது செய்து வருகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவோரையும் பிடித்து சிறையில் தள்ளிவருகிறார்கள். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் யார் மூலம் போதைப்பொருளை வாங்கியள்ளார்? திரையுலகை சேர்ந்த எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.