1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களே ரெடியா ? இன்று தொடங்குகிறது நீட் தேர்வு பயிற்சி வகுப்பு..!

1

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு  வருகிற மே 5-ம் தேதி நடக்கிறது. 

இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.  மே 2-ம் தேதி வரை சுமார் ஒரு மாதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இந்த பயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 13,304  மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சென்னையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 25-ம் தேதி  முதல் மே 2-ம் தேதி வரையிலான நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கான அட்டவணையை ஆசிரியர்கள் ஏற்கெனவே தயாரித்துள்ளனர். 

மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் 3 முழுமையான மாதிரி தேர்வுகளையும் எழுதுவார்கள்.மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக, நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய 4 பாடங்களையும் படிக்க உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 210 மாணவர்கள் நீட் தேர்வு எழுத  விண்ணப்பித்துள்ளனர். 

கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like