10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா?
2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. தொடர்ந்து 2017-ம் ஆண்டுவரை 14 முறை 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது.
ஆனால் 10 ரூபாய் நாணயம் வெளியானதில் இருந்தே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாணயம் செல்லாது என்ற வதந்தி வேகமாகப் பரவியது. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை.
பொதுவாகக் காய்கறி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், சிறு ஓட்டல் வியாபாரிகள், சில்லறை காசுகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினாலும் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் மட்டும் வாங்க மாட்டோம் எனக் கூறினர்.கிழிந்து போன கசங்கிய 10 ரூபாய் நோட்டு கூட வாங்கும் பொதுமக்கள் நாணயங்களை வாங்குவதில்லை.
பெரிய வணிக வளாகங்களில் கூட 10 ரூபாய் நாணயங்கள்குறித்து தவறான எண்ணம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் குறைந்து வருகின்றன. அதனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அவற்றை மறுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது . நாணயங்களை வாங்க மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் செய்தது. ஆனாலும் அது பல இடங்களில் எடுபடவில்லை.தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வரத் தொடங்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதிகளில் இன்னும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. கிழிந்த ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நாணயங்களையும் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து அதற்கு மாற்றாக ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் விஜயவாடாவில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 12 லட்சம் ரூபாய் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் வீணாகக் குவிந்து கிடக்கின்றன.இதே போலப் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வீணாகக் கிடக்கின்றன.
இது ரிசர்வ் வங்கிக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நாணயங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என மீண்டும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.