மக்களே ஊருக்கு போக ரெடியா ? மே 10-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி..!
மக்களவைத் தேர்தல் காரணமாக தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், இந்தாண்டு கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மலர் கண்காட்சி மற்றும் பழக்காட்சி மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்காட்சி மே மாதம் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாக இன்று(நேற்று) மட்டும் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு உதகையில் 126-வது மலர்க்காட்சி வரும் மே 10-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையும், அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்காட்சி மே 24 முதல் மே 26 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காகவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்த தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக இயந்திரத்துக்கு ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாதந்தோறும் சுகாதாரத்துறையின் மூலம் கிருமிகள் ஏதேனும் உள்ளதாக என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதே போல், 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, நீலகிரி மாவட்டம் தொடர்ந்து நெகிழி இல்லா மாவட்டமாக நீடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்குவது தொடர்பான ஏற்கெனவே பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொதைய நிலையின்படி, அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் மே மாதம் இறுதிவரை தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை நகராட்சி மூலம் எடுக்கப்பட்டுள்ளது. பார்சன்ஸ் வேலி மட்டுமல்ல, கிணறு மற்றும் இதர வழிகளிலும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தேவைப்படும்பட்சத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்காக லாரிகள் மூலமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்காள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.