மக்களே ரெடியா ? மே 10 முதல் உதகையில் கண்கவரும் மலர் கண்காட்சி..!

ஊட்டியில் 126 ஆவது மலர்க்கண்காட்சி வரும் மே 10- ஆம் தேதி முதல் மே 20- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இதேபோன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆவது பழக்கண்காட்சி மே 24- ஆம் தேதி முதல் மே 26- ஆம் தேதி வரையும் என 3 நாட்கள் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
மே மாதம் இறுதி வரை உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அருணா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கோடைக்கால விடுமுறையையொட்டி, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கும் விடுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஏரிகளில் படகுச்சவாரி செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக, வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக குன்னூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.