மக்களே ரெடியா ? 7,000 கி.மீ., சாகச பேரணிக்கு ஏற்பாடு..!
இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும் , போர்க்காலங்களில் வான்வழிப் போரை நடத்துவதும் விமானப் படையின் முதன்மைப் பணியாகும். இது அதிகாரப்பூர்வமாக, அக்டோபர் 8ம் தேதி 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப்படையாக நிறுவப்பட்டது. தற்போது 92வது ஆண்டு விழா வரும் அக்டோபர் 8ம் தேதி நடக்க உள்ளது.
இதையொட்டி உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான லடாக்கின் தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் வரை 7,000 கிமீ தூரம் கார் பேரணி நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அக்டோபர் 8ம் தேதி கடல் மட்டத்திலிருந்து 3,068 மீ., உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான தோய்ஸில் இருந்து கொடியேற்றப்படும். இந்த பேரணியில் மொத்தம் 52 விமான வீரர்கள், ஓட்டுநர்களாக மற்றும் இணை ஓட்டுநர்களாக கலந்துகொள்வார். பல பெண் அதிகாரிகள், விமானப்படையைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்த பேரணியில் வாகன ஓட்டிகளாக பங்கேற்கின்றனர். இந்த பேரணி இந்தியில் 'வாயு வீர் விஜேதா பேரணி' என்று அழைக்கப்படுகிறது.
விமானப்படை பேரணிக்கு அக்டோபர் 1ம் தேதி, தேசிய போர் நினைவிடத்தில் இருந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அன்பான வரவேற்பு அளிக்கிறார். இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தப் பேரணியின் நோக்கம் இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற வரலாறு, பல்வேறு போர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய வீரம் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும்.
இதன் மூலம் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். இந்திய விமானப்படையின் சாகசப் பிரிவு இந்த பேரணியை முன்னெடுத்து நடத்தும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.