பள்ளிகளில் மாஸ்க் கட்டாயமா? அன்பில் மகேஷ் சொல்வதென்ன..!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தொற்று பரவல் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்தது.
இதுதொடர்பாக இன்று (ஜூன் 4) திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பரவி வரும் நிலையில் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை. இது வீரியம் குறைந்த தொற்று அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறை கூறுகிறது. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறினார்.