இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை!

தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு அங்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது தரப்பில் அவரின் உடல்நலன் குறித்து வழக்கறிஞர் வந்தனா ஷா அண்ட் அசோசியேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ரா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சவாலான நேரத்தில் விரைந்து குணம் பெறுவதில் அவரது முழு கவனமும் உள்ளது. தன் மீது அன்பையும், அக்கறையையும், ஆதரவையும் கொடுத்தவர்களுக்கு அவர் நன்றி சொல்லியுள்ளார். மேலும், விரைந்து குணம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்குமாறு வேண்டியுள்ளார்.
ரசூல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாதியா, வந்தனா ஷா மற்றும் ரஹ்மான் ஆகியோரின் ஆதரவுக்கு தற்போது மனமார்ந்த நன்றியை அவர் சொல்லியுள்ளார். இப்போது அவருக்கு பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.