சிபில் ஸ்கோர் சரியாக இல்லாததால் பணி நியமன ஆணை ரத்து..!

பொதுத்துறை நிறுவன வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ., வங்கி, சி.பி.ஓ., (CBO) என்ற பணியிடத்திற்கு ஒருவரை நியமனம் செய்தது. அதன்பிறகு, அந்த நபரின் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்து பார்த்த போது, 3 தனிப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொகைகளை செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபரின் பணி நியமன உத்தரவை எஸ்.பி.ஐ., வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த பணிக்கு நியமிக்கப்படுபவர்கள், எந்த கடன் நிலுவை தொகையையும் வைத்திருக்கக் கூடாது என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில் வாதமாக முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "சிபில் ஸ்கோர் தெளிவாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தைக் கையாளும் நபர், பண விவகாரத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிபில் ஸ்கோர் சரியாக இல்லாதவர் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
எனவே, சிபில் ஸ்கோரை காரணம் காட்டி SBI நிர்வாகம் பணி நியமன ஆணையை ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். இந்தப் பரபரப்பான தீர்ப்பின் மூலம், வங்கியில் வேலை வேண்டுமென்றால் சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.