1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்..! முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்!

1

 ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 10) தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னம் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சிஆர்பிசி பிரிவு 125 மனைவியின் ஜீவனாம்சம் குறித்த சட்டபூர்வ உரிமையை பேசுகிறது. இது முஸ்லிம் பெண்களையும் உள்ளடக்கியது” என்று தனித்தனியாக, அதேசமயம் ஒரே தீர்ப்பை வழங்கியது. இந்த அமர்வு தனது தீர்ப்பில், “ஜீவனாம்சம் என்பது தொண்டு இல்லை. அது திருமணமான பெண்களின் உரிமை. திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும். இதற்கு மதம் ஒரு பொருட்டு இல்லை” என்று கூறியிருந்தது.

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட மறுத்த தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமது என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்துல் சமது தனது மனுவில், “விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒருவர் சிஆர்பிசி பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் பெறும் உரிமை இல்லை. முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-ன் விதிகளை அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னம் தனது தீர்ப்பில், “சட்டப்பிரிவு 125, திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்ற முக்கிய முடிவுடன் நாங்கள் இந்த குற்றவியல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like