1. Home
  2. தமிழ்நாடு

யுஜிசி நெட் ஜூன் 2024- ற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது..!

1

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கும், முனைவர் பட்டப்படிப்பில் நுழைவதற்கும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் இத்தேர்வில், உதவிப் பேராசிரியர் மற்றும் ஜேஆர்எப் (JRF) தகுதியினைப் பெற முடியும்.

இந்த யுஜிசி நெட் தேர்வானது, ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டு முறை நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் 2024, ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதன்படி, யுஜிசி நெட் ஜூன் 2024- ற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 10ஆம் தேதி இரவு 11:50 மணி ஆகும். தொடர்ந்து, மே 11ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மே 13 முதல் 15ஆம் தேதி இரவு 11:50 மணி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து, ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் யுஜிசி நெட் தேர்விற்கான தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் வெளியீட்டு தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதேநேரம், 83 பாடப்பிரிவுகளில் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், இந்த தேர்வானது ஓஎம்ஆர் (OMR) முறையில் நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1,150, ஓபிசி என்சிஎல் (OBC NCL) பிரிவினருக்கு ரூ.600 மற்றும் பட்டியலின, பழங்குடியின, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.325 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வினை எழுத விரும்புவோர் https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 011 40759000 அல்லது 011 69227700 என்ற எண்ணிற்கோ அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக, விண்ணப்பதாரர்களின் செயல்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரியாக கொடுக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. ஏனென்றால், விண்ணப்பத்தின் நிலை, ஹால் டிக்கெட் பதிவிறக்க நாள் மற்றும் தேர்வு மையம் ஆகியவை மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ மட்டுமே அனுப்பப்படும் என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like