14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும்: செல்வப்பெருந்தகை!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், `ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஸ்வத்தாமனுக்கு இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தது இவர்தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என மக்கள் கேட்கின்றனர். எனவே, அவரை கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாகக் கூறி, பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் மீது, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.சந்திரமோகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், ஜெய்சங்கருக்கு செல்வப்பெருந்தகை தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, அதற்காக 14 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால், ரூ.10 கோடி நஷ்டஈடுகோரி, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.