நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்க பரிசு..! கூறியவருக்கு ரூ.4000 அபராதம் விதித்த கோவை நீதிமன்றம்..!
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தனது உதவியாளருடன் சென்றிருந்தார். அப்போது பயணி ஒருவர் விஜய் சேதுபதி உதவியாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ அப்போதே வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து இருதரப்பும் சமாதானம் செய்து கொண்டதாகவும் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே திடீரென விஜய் சேதுபதியின் உதவியாளரை உதைத்த அந்த நபர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் விஜய் சேதுபதி இந்தியாவையும் முத்துராமலிங்க தேவரையும் விமர்சித்தார் என்றும் இதன் காரணமாகவே உதைத்தேன் என்று கூறிய புதிய சர்ச்சையை கிளப்பினார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளதாக பதிவிப்பட்டு இருந்தது. மேலும், விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், கோவை குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.