1. Home
  2. தமிழ்நாடு

சட்டவிரோதமாக உடல் உறுப்பு தானம் செய்வோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் எச்சரிக்கை

1

நாமக்கல் மாட்டம் பள்ளிப்பாளையம் பகுதி தறித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில், கிட்னி புரோக்கர்கள் நடமாட்டம், கடந்த ஓரிரு ஆண்டாக அதிகரித்துள்ளது.இவர்கள், கடன் பிரச்னை, குடும்ப சூழ்நிலையால் அவதிப்படும் தொழிலாளர்களை குறிவைத்து, கிட்னி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என, ஆசைவார்ததை கூறி மூளைச்சலவை செய்துவருகின்றனர். மேலும், கிட்னி கொடுக்க விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான ஆவணங்களையும் புரோக்கர்களே தயார் செய்து கொடுக்கின்றனர்.
 

இதுகுறித்து கடந்தாண்டு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., கவுன்சிலர் பாலசுப்ரமணியம், முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார்.

இந்நிலையில், அன்னை சத்யா நகர் பகுதியில் கிட்னி புரோக்கர்கள், அப்பகுதியை சேர்ந்த பல தொழிலாளர்களை குறி வைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி கொடுத்தால், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறி வருகின்றனர். தகவலறிந்த பள்ளிப் பாளையம் போலீசார், நேற்று இரவில் இருந்து அன்னை சத்யாநகர் பகுதியில் கிட்னி புரோக்கர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இது தொடர்பாக மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் உமா கலெக்டராக இருந்தபோது, உடல் உறுப்பு தானத்தில் குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டு 2, 3 பேர் கைதாகி தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். உடல் உறுப்பு தானம் மிகப்பெரிய மனிதநேய நடவடிக்கை. அதனை விற்பனையாகவோ, வியாபாரமாகவோ ஆக்குவது மிகப்பெரிய குற்றம். அதை யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாமக்கல்லில் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது.
 

பொதுவாக மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், தாங்களாக முன்வந்து தானம் செய்வோர் ஆகியன உடல் உறுப்பு தானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது உடல்உறுப்பு தானத்துக்கு ஆணையம் கொண்டு வரப்பட்டது.
 

இதனால் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் பிறகு, நிறைய பேர் தானம் செய்கின்றனர். தவறுதலாக வணிக நோக்கில் வியாபாரமாக உடல் உறுப்பு தானம் செய்தால் மிகப்பெரிய அளவில் தண்டிக்கப்படுவாரகள். யார் செய்தாலும் தண்டனைக்குரியது. விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like