விடிய விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் கரைபுரண்டு ஓடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு இரவு 7 மணி அளவில் திடீரென உள்ளே நுழைந்தனர். அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மேஜை , பீரோ உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், கணக்கில் வராத தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இந்த சோதனை இன்று மதியம் வரை நீடித்து வருகிறது. மேலும், சோதனை இரவு வரை நீடிக்குமா அல்லது நாளை வரை நீடிக்குமா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையத்தில் ஏராளமான சாய ஆலை அதிபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை அடுத்து, பள்ளிபாளையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.