1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அதிமுக எம்எல்ஏ இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

1

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்ய நாராயணன் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுத் தாக்கல் செய்ததாக பத்திரிக்கையாளர் அரவிந்தக்‌ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ”சத்யநாராயணன், மனைவி மற்றும் மகள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் என 13 கோடியே 2 லட்சம் சொத்து மதிப்பை, 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என குறைத்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புகாரின் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வடபழனி நெற்குன்றம் சாலையில் இருக்க கூடிய சத்யநாராயணன் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று சென்னை, கோவை, திருவள்ளூரிலும் சத்ய நாராயணனுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அலுவலகங்கள் என 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையில் 16 இடங்களிலும், திருவள்ளூரில் உள்ள சத்யநாராயணனின் பண்ணை வீடு மற்றும் கோவையில் 1 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. சத்யநாராயணன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்யநாராயணன் 16 விழுக்காடு (ரூ.2.64 கோடி) வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யநாராயணன் மற்றும் ராஜேஷ் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like