1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு..!

1

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சேலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை அண்ணாமலை பரப்பியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அண்ணாமலை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது சேலம் நீதிமன்றம். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அண்ணாமலையின் மனுவை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்தார். அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. செப்டம்பர் 9ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் வெறுப்பு பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like