அடுத்த மாதம் தவெக கொடி மாநாடு குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பைக் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை. வருகிற 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியல் கட்சி அறிவிப்பின் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டில் வழங்கியது போன்று, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளில் சட்டசபை தொகுதி வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் மாநாட்டிற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எந்தக் கொடியைப் பயன்படுத்துவது என்பது குறித்து விஜய் முடிவெடுப்பாரெனத் தமிழக வெற்றிக் கழக தலைமை தெரிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது எனவும், செப்டம்பர் 5-ல் படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதியென அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.