சென்னை மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு..! இனி பறக்கும் ரயில் சேவை பாலத்தில் மெட்ரோ ரயில்கள்..!
பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது. இதை பரங்கிமலை வரை நீட்டிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தள்ளிப் போய்கொண்டே வந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதி மக்கள் எளிதாக திருவான்மியூர், இந்திரா நகர், மயிலாப்பூர் பகுதிகளுக்கு ரயிலில் சென்று திரும்ப முடியும்.
தாம்பரம் முதல் கடற்கரை வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதை ஒப்பிடும் போது கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவையில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கிறது.
பாலத்திலேயே செல்லும் இந்த பறக்கும் ரயில் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதற்கானசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், MRTS ரயில் சேவையை ஏற்று நடத்தும் திட்டம் செயல் வடிவம் பெற உள்ளது. இந்தத் திட்டம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது. ஒப்புதல் கிடைத்தால், சென்னை மெட்ரோ நிறுவனம் (CMRL) ஒரு விரிவான திட்ட அறிக்கையை உடுவாக்கும். அதில் ரயில் நிலையங்கள், உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரயில்களை எப்படிப் பராமரிக்கப் போகிறது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த செயல்முறை படிப்படியாக பல மாதங்கள் வரை நீடிக்கலாம். தற்போது கிடைத்த தகவலின்படி, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பல லட்சம் பயணிகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ நிறுவனம் ஏற்று நடத்தினால் என்னென்ன நன்மைகள்?
"CMRL நிர்வாகம் MRTS-ஐ ஏற்று செயல்படுத்தினால், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பராமரிப்பு மேம்படும். நிலையங்களுக்குச் செல்லும் வழியும் மேம்படும். மேலும், நிலையங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதே சமயம் ரயில் கட்டணத்தை தற்போதுள்ள மெட்ரோ கட்டண அளவுக்கு உயர்த்தி விடக்கூடாது. அனைவருக்கும் கட்டுப்படியாகும்படி அளவில் வைக்க வேண்டும். ஏனெனில், லட்சக்கணக்கான மக்கள் இந்த சேவையை நம்பியுள்ளனர்" என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பறக்கும் ரயில் சேவை ரயில் நிலையங்களில் மூன்றாவது தளத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் இரண்டு தளங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ரயில் நிலையங்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. மெட்ரோ நிறுவனத்தின் கைக்கு செல்லும் போது ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்படும். பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் நிலவும்.
திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், பெருங்குடி போன்ற நிலையங்களில் ஐடி நிறுவன ஊழியர்கள் குறிப்பிடத்தக்க அளவு பயன்படுத்துகின்றனர். மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டால் இந்த பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.