செம அறிவிப்பு..!! 2026ல் ஆசிரியர்களுக்கு 3 முறை சிறப்பு டெட் தேர்வு..!!
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக மட்டும், 2026-ஆம் ஆண்டில் மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு குறைவான காலம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகச் சேவை உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தங்கள் பணி ஓய்வு வயது வரை பணியில் தொடரலாம். ஆனால், அவர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் கல்வி உரிமைச் சட்டம் அமலாவதற்கு முன் நியமிக்கப்பட்டு, ஓய்வுபெற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி உள்ள ஆசிரியர்கள், தீர்ப்பாணை வெளியான நாளிலிருந்து (01.09.2025) இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் பணியை விட்டு வெளியேற வேண்டும். அத்துடன், அவர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, விதிகளின்படி தகுதிபெற்றிருந்தால் பணிக்கொடை போன்ற இறுதிப் பலன்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையால் அதிகப்படியான ஆசிரியர்களின் பதவி உயர்வும், பணியும் பாதிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் பொருட்டு, சிறப்பு 'டெட்' தேர்வு நடத்த பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக மட்டும் 2026-ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை சிறப்புத் தேர்வுக்குத் தயார் செய்யும் விதமாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் மாவட்டந்தோறும் அல்லது வருவாய் வட்டம் அளவில் வார இறுதி நாட்களில் பணியிடைப் பயிற்சி வழங்கவும் தொடக்கக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
2026-ஆம் ஆண்டுத் தேர்வு முடிவுகளின் ஆய்வு மற்றும் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 2027-ஆம் ஆண்டிலும் தேவைக்கேற்ப 'டெட்' தேர்வுகள் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக இதுகுறித்த அறிவிக்கைகளை (Notification) வெளியிட உள்ளது.
.png)