1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு தினத்தையொட்டி அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து..!

1

தமிழ்நாடு தினமான இன்று (நவ.01) தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க.வின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்,பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  தமிழ்நாடு என பெயர் சூட்ட போராடிய தியாகிகளை போற்றுவோம்

மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்று திமுக பேசி வருகிறது. மத்திய அரசு என்பதைகூட ஒன்றிய அரசு என்றே 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அழைக்கிறது. மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட பாதிரியார் கால்டுவெல்லின், பிரித்தாளும் சூழ்ச்சியான, ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதையின் அடிப்படையில் உருவான திமுகவிடம் பிரிவினை சித்தாந்தம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பாரதம் என்ற நம் தாய் நாடு, எப்போதும் இருப்பது. நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் அவ்வப்போது பிரிக்கப்பட்டன. 1947-ல் விடுதலை அடைந்த போது தமிழ்நாடு மாநிலம் இல்லை. சென்னை மாகாணம் தான் இருந்தது. அதில் இன்றைய தமிழ்நாடும், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தின் பல பகுதிகளும் இருந்தன 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயர் பின்னாளில் வந்தாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலமாக உருவானது 1956 நவம்பர் 1. அந்நாளை தமிழ்நாடு தினமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம்.

ஆனால், எப்போதும் வரலாற்றை திரிக்கும் வழக்கம் கொண்ட திமுக, 1968, ஜுலை 18-ம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை, தமிழ்நாடு தினமாக அறிவித்துள்ளது. குழந்தை பிறந்த நாளை தான், பிறந்த தினமாக கொண்டாடுவார்கள். பெயர் வைத்த நாளை யாரும் கொண்டாட மாட்டார்கள். அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்ட நாளை கூட அல்ல, பெயர் வைக்க பரிந்துரைத்த நாளை தமிழ்நாடு தினமாக திமுக அரசு அறிவித்துள்ளது. 'திராவிடம், திராவிடர், திராவிட மாடல்' என்று திரும்ப திரும்பச் சொல்லி தமிழ், தமிழர் என்பதை மறைக்க நினைக்கும் திமுக, தமிழ்நாடு தினத்திலும் அரசியல் விளையாட்டு விளையாடுகிறது.ஆனாலும் மக்களுக்கு என்றும் நவம்பர் 1 தான் தமிழ்நாடு தினம்.

இந்நாளில் தமிழ்நாடு  என்று பெயர் சூட்டவும், சென்னை  மாநகரம், திருத்தணி, கன்னியாகுமரி, பீர்மேடு, தேவிகுளம், செங்கோட்டை உள்ளிட்ட  பல பகுதிகளை  தமிழ்நாடு மாநிலத்தோடு இணைக்கவும் போராடிய ம.பொ.சி. என்றழைக்கப்பட்ட  ம.பொ.சிவஞானம், சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தியாகிகளைப் போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like