அதிகமா பட்டாசு வாங்கி வெடிக்கணும் - வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை..!
ஒவ்வொரு தீபாவளியின்போதும் பட்டாசுகளால் ஏற்படும் மாசு என்பது, ஆரோக்கியமான சமூகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக காற்றின் தரம் மோசமடைவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன. இதை சுவாசிக்கும் போது நாள்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு சென்னை, உலக அளவில் மிக மோசமான காற்று பாதித்த நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் அளவை குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீபாவளிக்கு அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதாவது, "பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மத்தாப்புக்களின் வெளிச்சம்போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.