விரைவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஆகிறாரா அண்ணாமலை..? - பாஜக நிர்வாகி தகவல்..!

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். இந்த நிலையில் அண்ணாமலை தேசிய அரசியலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் ஆகலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையொட்டி அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது நாளடைவில் தெரிய வந்தது. அதேசமயம் அண்ணாமலையை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அவருக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தேசிய பொதுச் செயலாளர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முதல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் தேசிய பொதுச் செயலாளராக இருந்து தான் பாஜகவில் உயர்நிலைத் தலைவராக உருவெடுத்தனர்.
அந்த வகையில் 40 வயதாகும் அண்ணாமலையையும் பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமித்து அவரை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி தலைமை திட்டமிட்டு வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதே சமயம் அவருக்கு எப்போது தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என்ற தகவல் இன்னமும் உறுதியாகவில்லை.
முன்னதாக பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. தருண் விஜய், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைத்து விட்டதாக கூறி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததும் பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதாவது பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அவர் இன்னமும் அந்தப் பதவியில் நீடிக்கிறார். அடுத்த பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவரை நியமித்த பின்னர் தான் அடுத்த கட்டமாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் நிரப்பப்படும் என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
அந்த வகையில் பாஜகவின் தேசிய தலைவர் யார் என்பதிலும் அக்கட்சி மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை அண்ணாமலை தேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டால், அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது தேசிய நீரோட்டத்திலேயே கரைந்து விடுவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இதற்கு காலம் தான் பதில் அளிக்க வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர்.