பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்க முடிவு?

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைய இருக்கிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு சந்தித்து பேசியது. இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதேநேரத்தில் அண்ணா திமுக தரப்பில், இதுபோன்ற உறுதியான எந்த தகவலும் தெரிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணா திமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை பதவி விலக அமித்ஷா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவுடனான கூட்டணியை முறித்தது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் இழிவாக விமர்சித்தது உள்ளிட்டவைகளால் அண்ணாமலை மீது அதிமுக தரப்பு கடும் கோபத்தில் இருந்தது. இதனைத் தணிக்கும் வகையில் அண்ணாமலையை, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜகவின் புதிய தலைவராக, தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை நியமிக்கவும் டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறுவதால், இரு கட்சிகளிடையே நயினார் நாகேந்திரன் சுமூகமான உறவை முன்னெடுத்துச் செல்வார் என்பது டெல்லி மேலிடத்தின் நம்பிக்கையாம்.