1. Home
  2. தமிழ்நாடு

சனாதன தர்மத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் - அண்ணாமலை..!

1

வைகுண்டபுரத்தில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் ஊர் தலைவர் ஜெகன்ராஜ் தலைமையில் சமய மாநாடு நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

மதுரை மாநாட்டில் நான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். ஆகவே அதை மறுபடியும் சொல்கிறேன். நாம் சார்ந்திருக்கும் இந்துமதம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் எத்தனை பேர் இந்துக்களாக இருந்தார்கள். தற்போது எத்தனை பேர் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

இன்று உலகம் முழுவதும் முதலாவதாக கிறிஸ்தவர்கள் 230 கோடி பேர், 2-வது முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் 200 கோடி பேர், 3-வது எந்த மதத்தையும் சாராதவர்கள் 190 கோடி பேர் இருக்கிறார்கள். உலகில் 4-வது மதமாக இந்து மதம் உள்ளது. 120 கோடி பேர் இந்துவாக உள்ளனர். இந்து மதத்தில் இருந்து ஒருவர் மதம் மாறினால் கூட அது மிக பெரிய அபாயகரமான சூழ்நிலையை இந்து மதத்தில் ஏற்படுத்தி விடும். ஆகவே யாரையும் மதம்மாற விட கூடாது. மதம் மாறி சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.

மேலும் இந்து சமுதாய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். சனாதன தர்மத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை. ஆனால் நமது மதம் நமக்கு பெரிது. குழந்தைகள் பள்ளி கூடத்திற்கு போகும் போது திருநீறு பூச வேண்டும். ருத்ராட்ச கொட்டை அணிய வேண்டும் என்று நான் சொன்னதை தமிழக கல்வி அமைச்சர், 'இது சிறுபிள்ளை தனமானது' என்றார்.

ஏற்றத்தாழ்வுகளை உடைப்பதற்கு தான் சீருடை கொண்டு வரப்பட்டது. சீருடை என்பது மத அடையாளங்களை மறைப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. நாம் எல்லா சாதிகளையும் சமமாக நினைப்பவர்கள். ஆகவே நம் மத அடையாளத்தை அணிவதில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையிடம் 'திருநீறு பூச கூடாது... குங்குமம் வைக்க கூடாது...' என்று சொல்வது மதசார்பின்மை கிடையாது. அது ஒரு மதத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். ஆகவே நீங்கள் தைரியமாக குழந்தைகளுக்கு நம்முடைய மத அடையாளத்தை வைத்து விடுங்கள். அதே வேளையில் அந்த குழந்தைகளுக்கு இன்னொரு மதமும் முக்கியம் என்பதை சொல்லி கொடுக்க வேண்டும். நீங்கள் சனாதன தர்மத்தை காக்க கூடிய கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like